Menu Close

மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்; மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது…முதல்வர் பழனிசாமி வேதனை

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணராக, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர். அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அரசு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுததுள்ளார். மேலும், சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியது தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவர் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.